Monday, 24 July 2017

இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்

  

   என் செல்வராஜ்இலக்கிய சிந்தனை  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டில் பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகளில் பன்னிரண்டு சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிக்கிறது.அதில்  சிறந்த ஒரு கதையை ஆண்டின் சிறந்த சிறுகதையாக ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுத்து அந்த கதையின் தலைப்பில் 12 கதைகளையும் வானதி பதிப்பகம் மூலம் வெளியிட்டு வருகிறது.2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளின் தொகுப்பை கைபடாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி என்ற கதையின் தலைப்பை புத்தகத்தின் தலைப்பாகக் கொண்டு வெளியிட்டிருக்கிறது. இது இலக்கிய சிந்தனை அமைப்பின் 47 ஆவது ஆண்டு .இந்த பரிசளிப்பு விழாவும் புத்தக வெளியீடும் 2017 ஏப்ரல் 14 ல் சென்னையில் நடந்தது. 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி சாப்பிடுவது எப்படி? என்ற கதையை தேர்ந்தெடுத்தவர் இந்திரா பார்த்தசாரதி அவர்கள்.அவரின் பன்னிரண்டு கதைகளைப்பற்றிய மதிப்புரை தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

  2016 ஆம் ஆண்டின் சிறந்த பன்னிரண்டு கதைகள்

   1. நாலு ஜனம் - ஜி விஜய பத்மா -   ( கல்கி)

   2. புரிதல் - லலிதா ராம்         ( குமுதம் தீராநதி)

   3. ஆழம் - கலைச்செல்வி     ( கணையாழி )

   4. கைபடாமல் குச்சி ஐஸ்தயாரிப்பது எப்படி? மற்றும் கப்/கோன்/குல்ஃபி   
      சாப்பிடுவது எப்படி? - ராமச்சந்திர வைத்தியநாத்-    செம்மலர்

   5. அழையாத விருந்தாளி - சாருகேசி  ( அமுதசுரபி )

   6.   யா(ன்) னை ! - ப்ரியா கல்யாணராமன்  ( குமுதம் லைஃப்)

 7. காலவியூகம் - என் ஸ்ரீராம்      ( காலச்சுவடு)

 8. கனியும் மாற்றம் - பா ரகுபதி ( கல்கி)

 9. ரிட்டயர்மண்ட் - மதுரை சரவணன் - செம்மலர்

10. நாடு கடத்துதல் - எஸ் செல்வசுந்தரி - தினமணிக்கதிர்

11. ஆகாசப்பூ - பிரபஞ்சன்  - ஆனந்த விகடன்

12. திரை - ஜா தீபா    - ஆனந்த விகடன்.


நாலு ஜனம் - ஜி விஜய பத்மா

    வாழும்போது பிறருக்கு உதவினால் அவன் சாகும்போது நாலுபேர் உதவிக்கு வருவார்கள் என்பதை மையமாகக் கொண்டது. பாலு வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான். கையில் காசில்லாமல் மொபைலுக்கு டாப் அப் கூட செய்யமுடியாத நிலை.மற்றவர்களுக்கு அப்பா உதவுவதை விரும்பாதவன். ஆனால்அவன் அப்பா எல்லோருக்கும் உதவுபவர். கடன் வாங்கியும் மற்றவர்களுக்கு பிரச்னை என்றால் உதவுபவர். அவருக்கு  ஹார்ட் அட்டாக் வருகிறது. அப்பா கையில் காசு இல்லை. பாலுவிடமும் ஒன்றும் இல்லை. வைத்தியம் செய்யப் பணமில்லை அதனால் ஹாஸ்பிடல் போகவேண்டாம் என தடுக்கிறார் அப்பா. ஜிஹெச் போகலாம் என்கிறான் பாலு.அதற்குள் சாவு முந்திக்கொள்கிறது. அப்பா இறந்து விடுகிறார்.வைத்தியத்துக்கே காசில்லாத அவன் அப்பாவை எடுப்பதற்கு என்ன செய்வது என தவிக்கிறான். அவன் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயர் காசு கேட்காமலே டீ  போட்டு டிரம்மில் அனுப்புகிறார். பக்கத்து வீட்டு மாமா பாலு கையில் ஐயாயிரம் ரூபாயை கொடுத்து எப்படியும் தூக்குற செலவு ஒரு லட்சம் ஆகிவிடும் என்கிறார்.அப்பாவுடன் வேலை பார்த்த பியூன்  சண்முகம் இரண்டு நாளைக்கு முந்திதான் அவன் அப்பா கட்டி வந்த சீட்டை எடுத்தார் என்றும் அந்த பணம் இரண்டு லட்ச ரூபாயில் எடுப்பதற்கான செலவையும், குழந்தை இல்லாமல் இருக்கும் அவன் அக்காவுக்கான வைத்திய செலவையும் பார்த்துக்கொள்ளச் சொல்கிறார்.அந்தப் பணத்தில் அப்பாவை எடுக்கிறான்.அப்பா கோபத்தில் ஒரு நாள் தன் சாவுக்கு  மகன் செலவு செய்ய வேண்டாம் என்றும் தன் காசிலேயே எல்லாம் நடந்து விடும் என்று சொன்னது அப்படியே நடந்து விடுகிறது.

       அப்பா சம்பாதித்த பணத்தில் வாழும் மகன்களுக்கு இது ஒரு பாடம். பணமில்லையென்றால் மருத்துவம் யாருக்கும் கிடைப்பதில்லை இது இன்றைய நிலை. மருத்துவத்துக்கு ஆகும் செலவை விட இன்று அதிக பணம் இறுதிச் சடங்குகளை நடத்த தேவைப்படுகிறது.திருமணமான பெண்ணுக்கு குழந்தை இல்லை என்றால் அதற்கான வைத்திய செலவையும் அவளின் பெற்றோர் தான் செய்யவேண்டும் போன்ற உண்மைகளைச் சொல்கிறது இந்த கதை.


 ஆழம் - கலைச்செல்வி

    குளிர்பான ஆலைகள் வந்ததால் அந்த ஊர் தண்ணீரில்லாமல் வறண்டு போகிறது. வரலட்சுமியின் நிலத்துக்கு தண்ணீரில்லாததால் பயிர்வைக்க முடியாத நிலையில் கடன் வாங்கி ஆழ்குழாய்க் கிணறு போடுகிறார்கள். 180 அடியை நெருங்கியும் தண்ணீர் வராததால் அதற்கு மேல் போர் போட வசதியின்றி நிறுத்தி விடுகிறார்கள். அந்த போர்வெல் போட்ட துளை மூடப்படவில்லை. அது இலைகளால் மூடி கிடக்கிறது. கணவன் நாச்சிமுத்து கடனை அடைக்க வழி இல்லாமல் கூலிக்காரனாகி  குடிகாரனாகி விடுகிறான்ஊர் எல்லையில் இருக்கும் கிணற்றில் இருந்து குடிக்கத் தண்ணீர் கொண்டுவர தன் இரண்டு மகள்களுடன் போகிறாள் வரலட்சுமி. மகனும் பிடிவாதமாக அவர்களுடன் வருகிறான். மகன் சின்னவன்.சட்டை கூட போடாமல் அம்மாவுடன் போகிறான். வழியில் சிறுநீர் கழிக்க ஒதுங்குகிறான். இலைகளால் மூடப்பட்டிருக்கும் அவளது நிலத்திலுள்ள  போர்வெல் துளைக்குள் விழுந்து விடுகிறான். அய்யோ அக்கா என்று அலறல் கேட்டு அவனது பெரிய அக்காள் திரும்பி பார்த்தபோது கை மட்டுமே வெளியே தெரிகிறது.வரலட்சுமி அடித்துக்கொண்டு புலம்புகிறாள். ஊர்க்காரர்கள் போலீசுக்கு தகவல் சொல்லி அவர்கள் மூலம் தீயணைப்பு படை வருகிறது.108 ஆம்புலன்ஸ் வருகிறது. ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்துகிறார்கள். அதிகாரிகள் வருகிறார்கள் .பையன் 44 அடி ஆழத்தில் கிடப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.பொழுது போய் விடுகிறது. எப்படியும் பையனை எடுத்துவிடலாம் என்று நினைக்கும் அதிகாரிகளுக்கு பையன் 60 அடிக்கும் கீழே போய்விட்டான் என்பதை அறிந்ததும் பாறையை வெடிவைத்து தகர்த்து குழி தோண்ட முடிவு செய்கிறார்கள். ஆக்சிஜன் சிலிண்டர் அகற்றப்படுகிறது. வரலட்சுமிக்கு பயம் ஏற்பட்டு அதிகாரிகளைக் கேட்கிறாள். பாறையாக இருப்பதால் 30 அடிக்கு கீழே குழி தோண்ட முடியவில்லை என்றும் சிறுவன் முகம்  மண் மூடி கிடப்பதால் அவன் உயிரோடிருக்க வாய்ப்பில்லை என்றும் உடலை வெளியே எடுக்க வெடிவைத்து பாறைகளை உடைத்துப் பின் பள்ளம் தோண்டவேண்டும் என்கிறார்கள். தன் பையனே இறந்த பிறகு இனி தோண்டவேண்டாம் என்கிறாள் அவள்.அதிகாரிகள் அவளுக்கு நிலமையை புரிய வைக்க முயல்கிறார்கள். அவளோ " இருக்கிற எடத்தையும் பள்ளம் தோண்டி போட்டுட்டு போயிடுவீய...இன்னும் ரெண்டு பொட்டப்புள்ளங்க இருக்குதய்யா... அதுங்களை வெசம் வச்சா சாவடிக்க ?....." என்கிறாள் என்று கதை முடிகிறது.

                 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டினால் தண்ணீர் கிடைக்காத போது அந்தத் துளையை மூடாமல் அப்படியே போட்டு விடுகிறார்கள். வரலட்சுமி போர்வெல்லும் அதே கதை தான். அந்த மூடப்படாத போர்வெல் அவளின் மகனுக்கே எமனாகி விடுகிறது. நமது நிர்வாகமோ ஒரே மாதிரியான குழி தோண்டி சிறுவன் இருக்கும் ஆழம் வரை செல்லும் முறையையே கையாள்கிறது. பள்ளம் தோண்டுவதால் ஏற்படும் அதிர்வுகளே சிறுவனை இன்னும் உள்ளே கொண்டு போய்விடுகிறது. கடைசியில் வரலட்சுமி  சொல்வது போல் நிலத்தை பள்ளமாக்கி பிணத்தை அதன் சொந்தக்காரர்களிடம் கொடுத்துவிட்டு நகர்ந்து விடுவதாக இருக்கிறது. அந்த பள்ளத்தை மூட ஆகும் செலவு மிக அதிகம் ஆகும் என்பதே நிதர்சனமான உண்மை.அதைத்தான் வரலட்சுமி அதிகாரிகளிடம் சொல்வதாக கதை முடிகிறது.

  ரிட்டயர்மெண்ட் - மதுரை சரவணன்

      கணவன் ரிட்டயர்ட் ஆன பிறகு தினமும் அவரை அதிகாலை வாக்கிங்குக்கு தயார் செய்து அனுப்புவது முதல் மதிய உணவையும் தயார் செய்து எடுத்துக்கொண்டு பள்ளி செல்லும் பள்ளி ஆசியை சித்ரா  ஒரு நாள் ரிட்டயர் ஆகிறாள். பள்ளிக்கு சென்று குழந்தைகளைப் பார்க்கவேண்டும் என்பது அவள் ஆசை.ஆனால் அவளுக்கு முன்னால் ரிட்டயர் ஆன கிளாரா டீச்சர் பள்ளிக்கு வந்தபோது எல்லோரும் கிண்டலடித்ததையும் அவர் பள்ளிக்கு புரவலர் திட்டத்திற்காக தனது பென்சன் பணத்தில் பத்தாயிரம் தர வந்தபோது தலைமை ஆசிரியர் முதல் யாருமே மதிக்காத நிலையையும் பார்த்த சித்ராவுக்கு பள்ளிப் பிள்ளைகளைப் பார்க்காமல் எப்படி காலத்தை ஓட்டுவது என தவிக்கிறாள். பள்ளி மதிய உணவு வேளையில் கணவர் அவளைச் சாப்பிடுமாறு போனில் நினைவூட்டுகிறார். அவளுடைய இரண்டு பெண்களும் வெளிநாட்டில் இருக்கிறார்கள். வீடு சொந்த வீடு. ஆனாலும் அங்கு தொடர்ந்து இருப்பது கடினம் என்பதை உணரும் அவள் போனில் விசாரிக்கும் தன் கணவரிடம் வேறு வீட்டுக்கு போய்விடலாம் என்கிறாள். சொந்த வீடு அது என்பதை ஞாபகப்படுத்துகிறார் கணவர். அவளோ வாடகை வீட்டுக்கு போக புரோக்கரை அழைத்து பள்ளிக்கு எதிரில் உள்ள அபார்ட்மெண்ட் வாடகைக்கு வேண்டும் என்று கேட்கிறாள். கணவரும் சம்மதிக்கிறார்நகரின் ஒரு பள்ளியின் அருகில் உள்ள அபார்ட்மெண்டுக்கு குடியேறுகிறார்கள். தினந்தோறும் அவள் வாழ்க்கை பள்ளியில் இருப்பது போன்றே கடக்கிறது. அவள் கணவரும் மகிழ்கிறார். பள்ளி குழந்தைகளை பார்த்துக்கொண்டே அவர்கள் பள்ளி உணவு நேரத்தில் சாப்பிடுகிறார்கள்.

                       ரிட்டயர்மெண்ட் தவிர்க்க முடியாதது. பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்  அடிக்கடி அவர்கள் பணியாற்றிய அலுவலகம் செல்லவே  விரும்புவார்கள்.ஆனால் அவர்களுக்கு எந்த மரியாதையும் கிடைக்காதபோது, பணியில் இருப்பவர்கள் காட்டும் அலட்சிய மனோபாவத்தைப் பார்க்கும்போது ஏன் அங்கே போனோம் என்று ஆகிவிடும்.அதனாலேயே பெரும்பாலும் ரிட்டயர் ஆன பின் யாரும் தன் அலுவலகம் போக விரும்புவதில்லை. சித்ரா போல ரிட்டயர்ட் வாழ்க்கையை தனக்கு பிடித்தவாறு அமைத்துக்கொண்டால் நீண்ட நாள் நலமாக வாழலாம்.  கால வியூகம் - என் ஸ்ரீராம்

                   அனாதையான சிறுவன் சேதுவை பெரிய சிற்பி எடுத்துச் சென்று தன் வீட்டில் வளர்க்கிறார்.அவனுக்கு சிற்பம் செதுக்கும் தொழிலைக் கற்று கொடுக்கிறார். அவனது திறமையைக் கண்டு பெரும்பாலான தனது சிற்ப வேலைகளை அவனுக்கு கொடுக்கிறார். சேது சிவனின் ஊர்த்துவ தாண்டவம் சிலை வடிக்கிறான்.முத்திரை சரியாக வரவில்லை என்று அவனை தேரில் அழைத்துக்கொண்டு  ஒரு நாட்டிய மங்கை வீட்டுக்கு அழைத்து சென்று அவளை ஆடச்சொல்லி முத்திரைகளை கவனிக்க சொல்கிறார்.அவளின் மகன் பெரிய சிற்பியை அப்பா என்று அழைக்கிறான். பெரிய சிற்பி சேதுவை போய் சிற்பத்தை செதுக்கு என அனுப்பி வைக்கிறார்.பெரிய சிற்பி அவள் வீட்டிலேயே தங்கிவிடுகிறார்.சேது ஊர்த்துவ தாண்டவ சிற்பத்தை சரியாக செதுக்குகிறான். ஒரு வாரம் சென்ற பின் பெரிய சிற்பியின் மகளிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கிறான் சேது. அவள்  தன் அப்பா ஏக பத்தினி விரதன் என்றும் அவரைப்போன்ற ஒருவனையே மணப்பேன் என்கிறாள். பெரிய சிற்பி வைப்பாட்டியாக நாட்டியக்காரியை வைத்திருப்பதை அவன் சொல்லி விடுகிறான். பெரிய சிற்பியின் மனைவியும் மகளும் வீட்டைவிட்டு வெளியே போக முடிவு செய்கிறார்கள்.பெரிய சிற்பி தானே வீட்டை விட்டு வெளியேறுவதாக சொல்லி வெளியேறிவிடுகிறார். அதன் பின் அவரது சிற்ப வேலைகளை எல்லாம் சேது சிற்பியிடமே விட்டு விடுகிறார். சேது சிற்பி பெரிய சிற்பியின் மகளை மணந்து கொள்கிறான். மரணத்தருவாயில் இருக்கும்போது பெரிய சிற்பியின் மகன் வந்து கடைசியாக ஒரு முறை தனது தந்தை அவனை பார்க்க விரும்புவதாக அழைக்கிறான். சேது சிற்பியும் உடனே அங்கு அச்சிறுவனுடன் செல்கிறான். பெரிய சிற்பி தான் கனவு கண்ட கோயில்களின் வரைபடங்களை எடுத்துச் செல்லுமாறு சொல்கிறார். அவன் மறுத்துவிட்டுச் சென்றுவிடுகிறான். பெரிய சிற்பி மரணம் அடைந்தபின் பத்தாண்டுகள் கழித்து சேது சிற்பிக்கு ஒரு பெரிய மலைக்கோயிலை உருவாக்கும் பொறுப்பு வருகிறது. அக்கோயிலுக்கு முருகனின் சிலையை வடிக்கும்போது உடைந்து விடுகிறது.மீண்டும் வேறு ஒரு கல்லில் செதுக்க முயல்கிறான்.அதுவும் உடைகிறது.பெரிய சிற்பியின் வீட்டுக்கு சென்று அவர் மகன் நாகேந்திரனை தேடிக் கண்டு பிடிக்கிறான்.அவனிடம் பெரிய சிற்பியின் வரைபடங்கள் உள்ள சிற்ப சாஸ்திர கோணிப்பையை கேட்கிறான்அவன் அவற்றை எரித்துவிட்டதாகவும் ஆனாலும் அதில் உள்ள அனைத்தும் தனக்கு தெரியும் என்றும் புதிய கோயில் கட்ட தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறுகிறான். சேது அவனை அழைத்து சென்று அவன் சொல்வதுபோல் கோயிலைக் கட்டுகிறான்.கட்டி முடித்த கோயிலின் நான்காவது கும்பாபிஷேகத்தின் போது நாகேந்திரனைத்தேடி காட்டுக்குச்செல்கிறான் சேது. அங்கு நாகேந்திரன் பேசாச்சாமியாக இருக்கிறார்.பேசாச்சாமி நீ ஆணவத்தால் ஆனவன் என்கிறார். அந்த ஆணவத்தை அழிக்கத்தான் தற்போது வந்திருப்பதாக சேது சொல்கிறான்.அதனால் என்ன பயன் என்று கேட்ட நாகேந்திரனிடம் பெரிய சிற்பிக்கு செய்யும் பிராயசித்தம் என்கிறான் சேது. தான் ஒரு சிற்பியே அல்ல என்றும் சேதுவை அவமானப்படுத்தவே கோயில் கட்ட வந்ததாகவும் ஆனால் அப்புறம் பெரிய சிற்பியின்  ஓலைகளைப் பார்த்த்போது தான் கோயில் அதில் உள்ளபடியே கட்டப்பட்டிருப்பதாகவும் சொன்ன நாகேந்திரன் தான் அந்த ஒலைகளை அழிக்கவில்லை என்றும் சித்தர் தவக்குகைக்கு  போய்ப் பார் என்றும் சொல்கிறான். மலைக்கோயிலின் வரைபடம் பெரியசிற்பியின் கையெழுத்திலேயே அப்படியே இருந்தது.அந்த கோணிப்பையை எடுத்துக்கொண்டு பேசாச்சாமியை பார்க்கப்போகிறான். அங்கே யாரும் இல்லை. அந்த இடத்தில் யாரும் இருந்ததற்கான அடையாளமே இல்லை.வனம் சேது சிற்பியை உள்வாங்கிக்கொண்டது.

                தான் மிகச்சிறந்த சிற்பி என ஆணவத்துடன் இருந்த சேது சிற்பி மலைக்கோயிலை கட்ட முடியாமல்  தனது குருவின் ஓலைச்சுவடியை தேடிப் போவதும் அவருடைய மகன் சொல்படி கோயிலைக்கட்டி முடித்தபின் ஆணவம் அழிந்து குருவின் மகனைத் தேடி அலைவதுமே கதை. கடைசியில் அந்த நாகேந்திரன் என்கிற பேசாச்சாமியும் மாயமாக மறைந்து விடுகிறார்.குருவின் ஓலைகளைச் சுமந்த படி நாகேந்திரனைத் தேடிக்கொண்டே இருக்கிறார் கடைசி வரை.     2016 ஆம் ஆண்டின் இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு " கை படாமல் குச்சி ஐஸ் தயாரிப்பது எப்படி மற்றும் கப் /கோன்/ குல்ஃபி சாப்பிடுவது எப்படி  என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் வெளிட்டுள்ளது. விலை ரூபாய் 100/

Monday, 5 June 2017

எனக்குப் பிடித்த சிறுகதைகள்

என் செல்வராஜ்

 சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள்  கட்டாயம் அதில் இடம்பெறும். இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.


1. தனுமை - வண்ணதாசன்
2. விடியுமா? - கு ப ராஜகோபாலன்
3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்
4. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
5. அழியாச்சுடர் - மௌனி
6. எஸ்தர் - வண்ண நிலவன்
7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
9. நகரம் - சுஜாதா
10. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்
11. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா
12. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி
13. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்
14. நாயனம் - ஆ மாதவன்
15. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன்
16. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்
17. கன்னிமை - கி ராஜநாராயணன்
18. சாசனம் - கந்தர்வன்
19. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி
20. புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்
21. மூங்கில் குருத்து - திலீப் குமார்
22. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி
23. இருளப்ப சாமியும் 21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி
24. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்
25. மதினிமார்களின் கதை - கோணங்கி
26. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் - ஆதவன்
27. பத்ம வியூகம் - ஜெயமோகன்
28. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்
29. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் -சுப்ரபாரதி மணியன்
30. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி
31. சாமியார் ஜூவுக்கு போகிறார் - சம்பத்
32. பற்றி எரிந்த தென்னை மரம் - தஞ்சை ப்ரகாஷ்
33 பைத்தியக்கார பிள்ளை - எம் வி வெங்கட் ராம்
34. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்
35. கனவுக்கதை - சார்வாகன்
36. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி
37. அந்நியர்கள் - ஆர் சூடாமணி
38. செவ்வாழை - அண்ணாதுரை
39. முள் - பாவண்ணன்
40. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்
41.தோணி - வ அ இராச ரத்தினம்
42. ஒரு ஜெருசலேம் - பா செயப்பிரகாசம்
43.வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன்
44.கேதாரியின் தாயார் - கல்கி
45.தேர் - எஸ் பொன்னுதுரை
46.நசுக்கம் - சோ தர்மன்
47.பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்
48.அரசனின் வருகை - உமா வரதராஜன்
49.ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா
50. கற்பு - வரதர்
51. சாவித்திரி - க நா சுப்ரமணியம்
52.தேடல் - வாஸந்தி
53.நீர்மை - ந முத்துசாமி
54.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா
55.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி
56.கடிகாரம் - நீல பத்மநாபன்
57.அண்ணாச்சி - பாமா
58.அரும்பு - மேலாண்மை பொன்னுச்சாமி
59.ஆனைத்தீ - ரகுநாதன்
60.இருட்டில் நின்ற ... சுப்ரமண்ய ராஜு
 61.ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து
62.காசு மரம் - அகிலன்
63.சித்தி - மா அரங்கநாதன்
64.சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி
65. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன்
66.நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்
67.புயல் - கோபி கிருஷ்ணன்
68.மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்
69.மீன்கள் - தெளிவத்தை ஜோசப்
70. ரீதி - பூமணி
 71.வேட்டை - யூமா வாசுகி
72.வைராக்கியம் - சிவசங்கரி
73. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி
74. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்
75.சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
76.தழும்பு - சோ தர்மன்
77.அனல் மின் மனங்கள் - தமயந்தி,
78.பலாச்சுளை - ரசிகன்
79.அ முத்துலிங்கம் - அமெரிக்காகாரி
80.குடிமுந்திரி - தங்கர் பச்சான்
81.கழிவு - ஆண்டாள் பிரியதர்ஷினி
82.மதிப்பு மிகுந்த மலர் - வல்லிக்கண்ணன்
83.மாடுகள் -இமையம்
84.நரிக்குறத்தி - ஜெகசிற்பியன்
85.நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்
86.பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது - உதயசங்கர்
87.பிளாக் நம்பர் 27 திருலோக்புரி - சாரு நிவேதிதா
88.சத்ரு - பவா செல்லதுரை
89.தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்
90.உக்கிலு - குமார செல்வா
91.உத்தராயணம் - இரா முருகன்
92.வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்
93.ரெயிவே ஸ்தானம் - பாரதியார்
94.அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி
95.களவு போகும் புரவிகள் - சு வேணு கோபால்
96.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப்பாண்டியன்
97.சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்
98.கன்யாகுமாரி - த நா குமாரஸ்வாமி
99.கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் - ஆதவன் தீட்சண்யா
100.ஒரு சுமாரான கணவன் - ரெ கார்த்திகேசு


Wednesday, 3 May 2017

வாத்தியார் சாமி

என் செல்வராஜ்


. அப்போது எங்கள் பள்ளியில் மதிய உணவு பெரும்பாலும் சம்பா கோதுமையில் சமைத்த சாதம்  தான். நானும் எனது  வகுப்பு தோழர்களும் சேர்ந்து தினமும் சமைப்போம். ஒரே ஒரு பெரியவர் மட்டும் சமையல் செய்ய வருவார்.நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். நாராயணசாமி ஆசிரியர் எனது  வகுப்பு ஆசிரியர்.அவரே தலைமை ஆசிரியரும் கூட. கோதுமையை சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்பு பெரிய பாத்திரத்தில் எண்ணை விட்டு காய்ந்ததும் மிளகாய் வற்றல் போட்டு தாளித்துவிட்டு கோதுமை அளவுக்கு தகுந்தாற்போல தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவேண்டும். கொதித்த பின்பு கோதுமையை பாத்திரத்தில் போட்டு வேகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். தண்ணீர் சுண்டி கோதுமை சாதம் பதத்துக்கு வந்ததும் இறக்கவேண்டும். இதில் பெரும் பகுதி வேலையை நானும் எனது  நண்பர்களும் செய்வோம். சில சமயங்களில் தலைமை ஆசிரியர் வந்து சமையலறையில் கூடவே நிற்பார். மாலையில் பால் பவுடரில் தயாரித்த பால் அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவார்கள். தலைமை ஆசிரியர் மிக நல்லவர். அவர் ஊர் சிதம்பரத்தில் இருந்து 10 கிமீ தொலைவில் இருந்தது. தினம் போய்வர சிரமம் என்பதால்  பள்ளியிலேயே தங்கிவிடுவார். வாரம் ஒரு முறை மட்டும் ஞாயிற்றுக்கிழமை ஊருக்குப்போவார். பால் பவுடர், பாமாலின் ஆயில் எல்லாம் வெளிநாட்டில் இருந்து வருவதாகப் பேசிக்கொண்டார்கள். அந்த பள்ளியின் அருகிலேயே ஒரு பிரைவேட்  வாத்தியார் தங்கி இருந்தார். அவர் நீண்ட தாடி வளர்த்துக்கொண்டு சாமியார் போலவே இருந்தார். அதனால் நாங்கள் அவரை சாமியார் வாத்தியார்  என்றுதான் சொல்வோம்.அவர் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு எங்களுக்கு  வகுப்பு எடுப்பார். என் அப்பா என்னை அவரிடம் பிரைவேட் படிக்க சேர்த்து இருந்தார். அவர் நன்றாக சொல்லித் தருவார். வாய்ப்பாட்டை தலைகீழாக சொல்ல சொல்வார்.அதற்காக பலமுறை வாய்ப்பாட்டை படிக்கவேண்டும். கணக்குக்கு அடிப்படையானது வாய்ப்பாடு என்பதால் அவர் அதில் அதிகம் கவனம் செலுத்தினார் என்று நினைக்கிறேன்.சொல்லாவிட்டால் பிரம்படி தான். ஒழுங்காக படிக்காத பிள்ளைகள் அவர்களின் பெற்றோரை  அழைத்து வரவேண்டும். சாமியார் " பையன் சரியாகப் படிக்கவில்லை.அடித்து தான் படிக்கவைக்கவேண்டும். அடிக்கக்கூடாது என்றால் டியூஷனை விட்டு நிறுத்தி விடுங்கள் ' என்பார். பெரும்பாலான பெற்றோர்கள் நன்றாக அடித்து படிக்க வையுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.அப்புறம் அவர் இஷ்டம் தான். ஒரு முறை ஒரு மாணவனை கருங்கல் தூணில் கட்டி வைத்து எல்லா மாணவர்களையும் விட்டு அடிக்கச்சொன்னார். யாராவது அடிக்க மறுத்தால் அந்த மாணவனை அடித்து விடுவார்.அதற்கு பயந்து நாங்கள் எல்லோரும் அந்த அண்ணனை அடித்தோம். பயம் தான். இருந்தாலும் என்ன செய்வது. அவர் அடிக்க ஆரம்பித்தால் அவ்வளவு சீக்கிரம் நிறுத்தமாட்டார். பிரம்பு ஒடியும்  வரை கூட அடிப்பார்.

 எனக்கும் அவரிடம் அடி வாங்கிய அனுபவம் உண்டுஅப்போது நான் வாய்ப்பாடு படித்துக்கொண்டிருந்தேன். என்னிடம் அவர் ஏதோ கேட்டார். நான் கவனிக்கவில்லை போல. உடனே என்னை அவர் அழைத்தார். ஏதோ வாய்ப்பாடு தான் கேட்கப்போகிறார் என்று நான் நினைத்து அவரின் அருகில் சென்றதுமே என்னை அடிக்க ஆரம்பித்தார். கையில் இருந்த வாய்ப்பாடு புத்தகத்தை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக்கொண்டேன்.அவர் அடித்த அடியெல்லாம் வாய்ப்பாட்டு புத்தகத்தில் விழ அது கிழிந்து சுக்கலானது. கடைசியாக அவர் அடிப்பதை நிறுத்தியபோது என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. ஏன் அடித்தார் என்று அவரிடம் கேட்க முடியாது. மாலை ஆறு மணிக்கு பிரைவேட் முடிந்ததும் வீட்டுக்கு சென்றேன். அப்பா என்னிடம் ஏன் கண் கலங்கி இருக்கிறாய் என்றார். ஒண்ணுமிலேப்பா என்றேன். மீண்டும் மீண்டும் அவர் கேட்டார். கடைசியில் அழுது கொண்டே சாமியார் வாத்தியார் என்னை அடிச்சிட்டாரப்பா என்றேன். எங்கே அடிச்சார் காட்டு என்றார் அப்பா. கை விரல்களில் அடிபட்டு ரத்தம் வந்திருந்தது. சில விரல்கள் வீங்கி விட்டன. பள்ளிப் பையில் இருந்த வாய்ப்பாட்டை எடுத்துக் காட்டி இத தூக்கி அடியைத் தாங்கிக்கிட்டேம்பா என்றதும் அப்பா கோபம் அதிகமானது. சட்டைய கழட்டி முதுகைக் காட்டினேன். முதுகும் பாதி அளவு வீங்கி இருந்தது. என் அம்மா என் காயங்களையும் வீக்கத்தையும் பார்த்ததும்" முதல்ல போயி அந்த வாத்திய என்னன்னு கேளுங்க" என்றார். "காலயில போயி கேக்கிறன் "என்றார் அப்பா. மறுநாள் காலையில் பிரைவேட் நடக்கும் இடத்துக்கு என்னுடன் வந்தார். சாமியாரைப் பார்த்து வணக்கம் வைத்தார். சாமியார் என்ன விஷயம் என்று கேட்டார். என் மகனை ஏன் மோசமாக அடித்திருக்கிறீர்கள் என்று கேட்ட அப்பாவிடம்" அவன் படிக்கும் போது நான் சொன்னதை கவனிக்கவில்லை. அதனால் தான் அடித்தேன் என்றார். வீக்கம் ஓரளவு வடிந்திருந்த கை மற்றும் முதுகை அப்பா காட்டச்சொன்னார். சாமியார் ஒன்றும் சொல்லவில்லை. கிழிந்துபோன வாய்ப்பாட்டை எடுத்துக்காட்டி இது எப்படி கிழிந்தது எனக் கேட்டார் அப்பா. பதிலில்லை சாமியாரிடம். அப்பா கோபத்துடன் இனிமே என் பையன் பிரைவேட்டுக்கு வரமாட்டான் என சொல்லிவிட்டு என்னை அழைத்துக்கொண்டு விடு விடென சென்றுவிட்டார். பிரைவேட்  படிப்பது அத்துடன் நின்று போனது.

எங்கள் பள்ளி ஒரு பெரிய ஓட்டு வீட்டில் இயங்கியது. ஒரு முறை எனது ஆசிரியர் மேலே ஏறி பரணில் இருந்த புத்தகங்களை சுத்தம் செய்யச் சொன்னார்.நூற்றுக்கணக்கான புத்தகங்கள் கட்டு கட்டாய் கட்டப்பட்டுக் கிடந்தன. அந்த புத்தகங்கள் யாராவது அதை திறந்து பார்க்க மாட்டார்களா என்று பரிதாபமாக பார்ப்பது போலத்  தெரிந்தன. ஒவ்வொரு கட்டையும் அவிழ்த்து அதில் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றாக சுத்தம் செய்து மீண்டும் கட்டினேன். சில புத்தகங்களின் தலைப்பு என்னைப் படிக்கத்தூண்டியது. அவற்றை மட்டும் எடுத்து தனியாக வைத்துக்கொண்டேன். வாத்தியாரிடம் கேட்டால் தருவாரோ மாட்டாரோ
என்ற சந்தேகம் எனக்கு. இன்னும் பல கட்டுகள் சுத்தம் செய்யப்பட வேண்டும். நான் வாத்தியாரிடம் நாளை மீதியை சுத்தம் செய்கிறேன் சார் என்றேன். அவரும் சரி என்றார். அந்த சில புத்தகங்களை அவருக்கு தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். இரவோடு இரவாக அனைத்து புத்தகங்களையும் படித்துவிட்டேன். மறுநாள் பள்ளிக்கு சென்றபோது அந்த புத்தகங்களை எடுத்துச் சென்று யாருக்கும் தெரியாமல் அவை இருந்த கட்டுகளுக்குள்ளேயே வைத்துவிட்டேன். அன்றும் சில கட்டுக்களைச் சுத்தம் செய்தேன். அதில் பிடித்த சில புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து வந்துவிட்டேன். சுத்தம் செய்த ஒவ்வொரு நாளும் சில புத்தகங்களை எடுத்து வந்து இரவிலேயே படித்து விட்டு மறுநாள் அதே கட்டில் வைத்து விடுவதை பழக்கமாக்கி கொண்டேன்.பல புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவற்றை வீட்டுக்கு எடுத்து வர வழி தெரியவில்லை.வாத்தியாரிடம் கேட்க பயம். அவை எல்லாம் மாணவ்ர்களுக்கான பள்ளி நூலகத்தின் புத்தகங்கள் என்பதும் எனக்குத் தெரியாது. ஆத்திச்சூடி கதைகள், குறள் நெறிக்கதைகள், தெனாலி ராமன் கதைகள், பீர்பால் கதைகள், அப்பாஜி கதைகள் இன்னும் பல கதைகளைப் படித்தேன். அந்த கதைகள் எனக்கு கதைகளின்மீது ஒரு ஆசையைத் தூண்டி விட்டது.
   

 ஐந்தாம் வகுப்பு படிப்பு  முடிந்து ஆறாம் வகுப்பு படிக்க கானூர் என்கிற பெரிய கிராமத்தில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். கானூர் எங்கள் ஊரில் இருந்து  4 கிமீ தொலைவில் இருந்தது. தினமும் நடந்துதான் போகவேண்டும். எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. தமிழில் சிறப்பாக படிக்கக்கூடியவனாக இருந்தாலும் ஆங்கிலம் அவ்வளவாக வராதது எனக்கு வருத்தமாகவே இருந்தது. தமிழில் பாடப்புத்தகங்களைத்தாண்டி கிடைக்கும் கதைப்புத்தகங்கள் எதுவானாலும் படிக்கும் வழக்கம் இருந்தது. தினமும் காலையில் பள்ளிக்குப் போகும் போதே கானூர் டீக்கடையில் தினத்தந்தி படிக்கும் பழக்கத்தைக் கடைபிடித்தேன். தினமும் தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு கதை என்னைக் கவர்ந்தது. சிந்துபாத்தும் லைலாவும் தினசரி தினத்தந்தியில் கதைபடிக்கும் ஆர்வத்தை வளர்த்தார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் என் ஊரில் இருந்த டீ கடையில் பேப்பர் படித்து வந்தேன். அப்போதெல்லாம் ஊரின் டீ கடையில் தினத்தந்தியும் முரசொலியும் தான் வரும். . அண்ணா மறைவுக்குப் பின் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். திமுக கிளை செயலாளர்  வீடு எனது வீட்டுக்கு அருகில் இருந்தது. அவரிடமிருந்து அண்ணாவின் சிறுகதைகள் வாங்கிப்  படித்தேன். அதில் உள்ள புலிநகம், திருமலை கண்ட திவ்ய ஜோதி, செவ்வாழை, பிடி சாம்பல் ஆகிய சிறுகதைகள் இன்றைக்கும் எனது நினைவில் இருக்கின்றன. ஆங்கிலம் வரவில்லையே என்று வருந்தினேன். ஒரு நாள் என் பிரைவேட் வாத்தியார் சாமியார் எங்கள் பள்ளிக்கு வந்து எனது வகுப்பு ஆசிரியரைச் சந்தித்தார். எனது வகுப்பு ஆசிரியர் சிவம், ஆங்கில ஆசிரியரும் அவரே. சாமியார் எனது ஆசிரியரிடம் என்னைப்பற்றி " சார், அவனுக்கு  ஆங்கிலம் தவிர அனைத்துப் பாடங்களிலும் நல்ல மார்க் வாங்குவான்.ஆங்கிலம் மட்டும் அவனுக்கு நல்லா சொல்லி கொடுத்தீங்கன்னா அவன் நல்லா படிச்சு ஒங்க பள்ளிக்குப் பேர் வாங்கிக் கொடுப்பான் " என்று சொன்னார். எனது ஆசிரியர் " இவ்வளவு தூரம் ஒங்ககிட்ட படிச்ச ஒரு பையனுக்காக வந்து சொல்றீங்களே அப்பவே இவனது திறமை எனக்குப் புரியுது. நிச்சயம் நான் அவன ஆங்கிலம் படிக்க வைக்கிறேன் " என்றார். எனக்கோ ஆச்சரியம்.அவரிடம் நான் படித்ததோ  சில மாதங்கள் தான். என்னை அவர் கடுமையாக அடித்ததால் நான் பிரைவேட் போவதையே என் அப்பா நிறுத்திவிட்டார். ஆனாலும் அவர் எனக்காக வந்து என் ஆசியரிடம் சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது. சாமியார் என் மனதில் இன்னும் உயர்ந்து நின்றார்.

 மீண்டும் ஆங்கிலம் படிக்க ஒரு பிரைவேட்டில் சேர முடிவு செய்தேன். அப்பாவும் ஒத்துக்கொண்டார். கிருஷ்ணன் என்பவர் பிரைவேட் நடத்தி வந்தார். அவர்
கூட்டுறவு சங்கத்தில்  வேலை செய்து வந்தார். மாலையில் ஆங்கில வகுப்பு எடுப்பார். அவர் வரமுடியாத போது அவரது மனைவி மாலதி அக்கா  வகுப்பெடுப்பார். அவர் ஒரு பட்டதாரி. தமிழில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். ஆங்கிலத்தை எழுதப் படிக்க கற்றுக்கொண்டது அப்போதுதான். எனது வகுப்பாசியரின் உதவியுடன் ஆங்கிலம் ஒரு வழியாக எனக்கு படிக்க வந்துவிட்டது. ஆனால் அதனோடு  கூடவே ஒரு பிரச்சினையும் சேர்ந்துகொண்டதுபொருள் தெரியாமல் என்னால் மனப்பாடம் செய்ய முடியவில்லை.அதனால் அடிக்கடி ஆசிரியரிடம் ஆங்கில வார்த்தைகளின் அர்த்தத்தைக் கேட்டு நோட்டில் எழுதிக்கொள்வேன்.அதன் பிறகு தான் என்னால் மனப்பாடம் செய்ய முடிந்தது. அப்பாவிடம் இதைச்சொன்னேன். அவர் அடுத்த வாரமே பழைய புத்தகக் கடையில் கிடைத்த லிப்கோ ஆங்கிலம் -தமிழ் அகராதி வாங்கி வந்து கொடுத்தார். அது எனக்கு ஆங்கிலத்தை விரைவாக கற்றுக்கொள்ள உதவியது. மாலதி அக்காவிடம்  நிறைய பைண்டு செய்யப்பட்ட சரித்திர நாவல்கள் இருந்தன. பொன்னியின் செல்வன், பாண்டிமாதேவி, வேங்கையின் மைந்தன் போன்ற நாவல்களைப் படித்தேன். அதனால் எனக்கு வரலாற்றின் மீதும் வரலாற்று நாவல்கள் மீது ஆர்வம் அதிகமானது. வரலாறு நன்றாக புரிந்தது.இந்தக் கதைகள்  சேர, சோழ , பாண்டியர் வரலாறை எனக்கு எளிதாக
புரியவைத்தன.

        ஒரு நாள் தோப்பின் அருகில் இருந்த என் உறவினர் மூர்த்தியின் டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூங்கில் பிளாச்சுகளால் செய்யப்பட்ட கேட்  போடப்பட்ட கொட்டகை அது. கேட்டின் உயரம் பத்து அடி இருக்கும்இரண்டு  பகுதிகளையும் கொஞ்சம் விலக்கினால் என்னால் உள்ளே புகுந்து விட முடியும் என்று தோன்றியது. அந்த கொட்டகையில் என்ன படிக்க கிடைக்கும் என்று பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமாக கேட்டை விலக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன். அங்கே குமுதம் புத்தகங்கள் ஏராளமாகக் கிடந்தன.அங்கேயே உட்கார்ந்து குமுதம் புத்தகத்தைப் புரட்டினேன். அதில் ராஜதிலகம் என்ற சாண்டில்யன் தொடர்கதை வந்திருந்தது. புத்தகங்களைத் தேதி வாரியாக அடுக்கினேன். முதல் இரண்டு குமுதம் புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆசை வந்தது. எப்படியும் கடையில் பழைய பேப்பர்காரனிடம் தான் போடப்போகிறார்கள். அதற்கு முன் படித்துவிட்டு திரும்ப கொண்டுவந்து வைத்துவிடலாம் என்று நினைத்தேன். யாரும் வரவில்லை என்பதை வெளியே எட்டிப்பார்த்து உறுதி செய்துகொண்ட பின் இரண்டு புத்தகங்களை என் சட்டைக்குள் மறைத்து எடுத்து வந்து விட்டேன். வீட்டுக்கு வந்ததும் அதில் வந்திருந்த ராஜதிலகம் தொடரைப் படித்தேன். அந்த கொட்டகையில்  இருக்கும் குமுதம் புத்தகம் எல்லாவற்றையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டும் என்ற வெறியை சாண்டில்யன் என்னுள் உருவாக்கி விட்டார். படித்து விட்டு அந்த புத்தகங்களை பத்திரமாக வைத்தேன். அந்தப் பக்கம் போகும் போது இரண்டு புத்தகங்களை எடுத்து வருவது எனக்கு வாடிக்கையாகி விட்டது. உள்ளூர எனக்குப் பயம். எடுத்து வந்த புத்தகங்களை திரும்பக் கொண்டு சென்று வைக்க மனமில்லை.முழுவதும் படித்து முடித்த பின் அனைத்து புத்தகங்களையும் கொட்டகையில் வைத்து விடலாம் என நினைத்தேன். சாண்டியனின் அந்த கதை அவ்வளவு  அற்புதமானது. பல்லவ மன்னன் ராஜசிம்ம பல்லவனின் வரலாற்றை அருமையான கதையாக மாற்றியிருந்தார். சில அத்தியாயங்களே எனக்கு கிடைத்தன. போருக்காக ராஜசிம்மன் தயாராவதையும், அந்த போரில் இரண்டாம் புலிகேசி என்ற சாளுக்கிய மன்னன் தோற்று ஓடியதையும் கூரம் செப்பேடு குறிப்பிட்டு இருப்பதையும்  அதில் எழுதி இருந்தார். இன்னும் எத்தனையோ வாரம் அதற்கு முன் வந்திருக்கும். அவை கிடைக்கவில்லை. அந்தக் கதையைப் படித்ததில் இருந்து முழுமையாக ராஜதிலகம் தொடர்கதையை படிக்கவேண்டும் என்ற ஆசை மனதில் தோன்றிவிட்டது. வாங்கும் வசதி எனக்கு இல்லை.எனக்குத்  தெரிந்து குமுதம் புத்தகத்தை  மூர்த்தி  மட்டுமே என் ஊரில் வாங்கினார். எப்போதும் போல அந்த டிராக்டர் கொட்டகைக்குப் போனேன். மூர்த்தி அங்கிருந்த கயிற்று கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தார். நான் மெல்ல மெல்ல நடந்து சென்று அந்த குமுதம் புத்தகங்களின் பக்கம் அமர்ந்தேன். படிக்க ஆரம்பித்தேன். கொஞ்ச நேரம் கழித்து இரண்டு புத்தகங்களை என் இடுப்பில் சட்டைக்குள் வைத்துக்கொண்டு எழுந்தேன். திரும்பிய அடுத்த நிமிடமே" நில்லுடா திருட்டு பயலே "என்று என்னைத் திட்டியவாறு மூர்த்தி எழுந்து வந்தார்.என் கை கால்கள் நடுங்க ஆரம்பித்தன. இத்தனை நாளாய் நான் பயந்து கொண்டிருந்தது நடந்தே விட்டது

          நான் எதிர்பாராத வகையில் அவர் என்னைத் தன் செருப்பால் அடிக்க ஆரம்பித்தார். அவமானத்தால் என் மனம் குன்றிப்போனது. சில அடிகள் அடித்தபின் என்னை அங்கிருந்த தூணில் கட்டிப்போட்டு விட்டார். அந்த கொட்டகையின் அருகில் குடியிருந்த சாமியார் வாத்தியார் சத்தம் கேட்டு அங்கு வந்தார். மூர்த்தியிடம் ஏன் அவனைக் கட்டிப்போட்டு இருக்கிறாய் எனக்கேட்டார். "சாமியாரே அவன் என்னோட குமுதம் புத்தகத்தை திருடிவிட்டான்.அதனால் தான் அடித்தேன், கட்டிப்போட்டேன்" என்றார் மூர்த்தி. என்னருகே வந்த சாமியார் "ஏண்டா திருடினே என்று கேட்டார். " சார் நான் படிக்க எடுத்திட்டு போனேன்.திருட நினைக்கல சார் "   புத்தகத்தை எங்கே வச்சிருக்க? "  "எல்லாம் வீட்டில தான் சார் இருக்கு" "கேட்டு வாங்கிட்டு போயிருக்கலாமில்லையா ? " யாரும் இல்லாததால கேட்க நினைக்கல, தப்பு தான் சார். இனிமே அப்படி செய்யமாட்டேன்". எங்களின் உரையாடலை கேட்டவாறு இருந்த மூர்த்தி " சாமியாரே இப்ப என்ன பண்ணலாம் சொல்லுங்க ? என்றார். " மூர்த்தி அவன் படிக்கத்தானே எடுத்துட்டுப் போனான். இந்த பழைய குமுதம் புத்தகத்தையெல்லாம் நீ என்ன செய்யப்போற "   சாமி அது உங்க வேல இல்ல, நீங்க ஒரு வாத்தியாரு. நான் புத்தகத்தை குப்பையில கூட போடுவேன். அது என் இஷ்டம். ஆனா இவன் திருடுனது தப்புதானே"  "ஒன் புத்தகம் நீ என்ன வேணும்னாலும் செய்யலாம். அதை இந்த பையனுக்கு கொடேன், அவன் படிக்கத்தானே எடுத்தான் " முடியாது. நீங்க அவனுக்கு வக்காலத்து வாங்க வேணாம். என் எல்லா புத்தகமும் உடனே வந்தாகனும் சாமியாரே" என்றார் மூர்த்தி. அடி பட்ட வலியுடனும் புண்பட்ட மனதுடனும் இருந்த நான் " சார் நான் எல்லா புத்தகத்தையும் கொடுத்திடரேன், என்ன விடச்சொல்லுங்க சார் என்றேன் நான். சாமியார் மூர்த்தியை சற்று வெளியே அழைத்துப்போனார். மூர்த்தியிடம் ஏதோ பேசினார். சற்று நேரத்தில் திரும்பி வந்த மூர்த்தி முகத்தில் கோபம் குறைந்திருந்தது.என் கட்டை அவிழ்த்து விட்டார். வாத்தியார் என்னை என் வீட்டுக்கு அழைத்துப்போனார். நான் கொடுத்த புத்தகங்களை எடுத்துக்கொண்டு மூர்த்தியிடம் கொடுக்கப்போன அந்த பிரவேட் வாத்தியார் என் மனதில் மிகப்பிரமாண்ட மனிதராய் உயர்ந்து நின்றார்.  அவர் சாமியாரல்ல, சாமியாகவே எனக்குத் தெரிந்தார்.